Tuesday, April 12, 2011

மனோதத்துவம் - நாய் மனசு

முன்குறிப்பு: இந்த பதிவு ஒரு புத்தகத்திலிருந்து பகிரப்படும் செய்தி.

புத்தகம்: மனதை மேம்படுத்தும் மனோதத்துவம்

ஆசிரியர்: பா. செல்வராஜ்.

நாய் மனசு:

வாழ்நாளில் புதிது புதிதாக பல முயற்ச்சிகளை எடுத்து செயல்படுத்தி வெற்றி காண்பதே வாழ்க்கையை சுவாரசியமாக கொண்டு செல்ல சிறந்த வழி.  எனவே நம்மில் பலர் விரும்பி பிரச்சனைகளை தேடிச் சென்று எதிர்கொள்கிறோம். பிரச்சனைகள் வேண்டாம் என்று அமைதி வாழ்க்கையை விரும்பிச் செல்பவர்களை பிரச்சனைகள் துரத்திச் சென்று துன்புறுத்துகின்றன.

அதனால் அமைதியை விரும்புகிறவர்கள் போர்க்களத்தில் இறங்கி  பிரச்சனைகளுக்கு புறமுதுகு காட்டி ஓட புறப்பட்டு விடுகிறார்கள். ஆனால் பிரச்சனைகளை  எளிதில் சமாளிக்க வாய்ப்புகள் இருக்கும்போது கூட பலர் அவற்றை தீர்க்க முடியாமல் தன்னை பிரச்சனைகளுக்கு பலிகடாவாக்கிக் கொள்வதை  பார்த்திருக்கிறோம். ஏன் இத்தகைய வியப்பான நடத்தை மனிதர்களிடையே உள்ளது? 

இதைப் புரிந்து கொள்ள நாய்களிடையே ஒரு சோதனை நடத்தப்பட்டது.

A, B என்ற இரண்டு அறைகள் உள்ள சோதனை பெட்டி ஒன்று வடிவமைக்கப்பட்டது. அப்பெட்டியின் A அறையில் கீழ்த்தளம் இரும்பு கம்பிகளாலான வலையால் ஆனது. அக்கம்பி  வலை தரைக்கு மின்சாரம் பாய்ச்சும் வசதியுண்டு. அவ்வறையிலேயே விளக்கு  ஒன்றும் உண்டு. வேண்டும்போது அவ்விளக்கை எரியச் செய்யலாம். 

B அறையின் தரைத்தளம் மரத்தினாலானது. அங்கே மின்சாரத்தை பாய்ச்ச முடியாது. A அறையிலிருந்து B அறை உயரமற்ற பலகை ஒன்றினால் பிரிக்கப்பட்டு  இருக்கும். சுலபமாக தாண்டிக் குதித்தாலே A என்ற அறையிலிருந்து B அறைக்கு   தப்பிச் சென்று விடலாம்.

இப்போது நாயொன்றை சோதனையாளர் A அறையில் எங்கும் ஓடி வட  முடியாதபடி வார் போட்டு கட்டினார். பின்னர் சோதனையை ஆரம்பித்தார்.   சோதனையில்  முதலில் விளக்கு எரியும். அதைத் தொடர்ந்து தரை தள கம்பிகளுக்கு மின்சாரம் பாய்ச்சப்படும்.

அதன் மீது கட்டப்பட்டு நின்று கொண்டுள்ள நாய் உடலில் மின்சாரம் பாய்ந்து  துடித்தது. தொடர்ச்சியாக பல முறை இவ்வாறு விளக்கு எரிவதைத் தொடர்ந்து மின்சாரம் பாய்ச்சப்பட்டது. இப்போது நாய் விளக்கு எறிந்தவுடன் தொடர்ந்து மின்சாரம்  பாய்ச்சப்படுகிறது என்பதை புரிந்து கொண்டு விளக்கு எறிந்தவுடன் எப்படியாவது தப்பிக்கலாம் என்று முயன்றது. ஆனால் வாரினால் நன்கு கட்டப்பட்ட நாயால் தப்பிக்க முடியவில்லை.

தொடர்ச்சியாக இம்மாதிரி பல முறை செய்தவுடன் நாய் நம்மால் தப்பிக்கவே முடியாது, மின்சாரத்தை ஏற்றிக் கொள்வதுதான் வழி என்று முடிவு கட்டியது.

இப்போது சோதனையாளர் நாயை வார் கட்டிலிருந்து விடுவித்தார். தற்போது நாயால் எம்பி குதித்து B அறைக்கு ஓடிவிட முடியும்.

இப்போது விளக்கு எரிந்தது, நாய் அதைக் கண்டது, விளக்கு எரிவதைத் தொடர்ந்து மின்சாரம் பாய்ச்சப்படும் என்று நாய்க்கு நன்கு தெரியும். அவ்வாறே மின்சாரம் பாய்ச்சப்பட்டது. சற்றே எம்பிக் குதித்தால் நாய் B அறைக்கு தாண்டி  மின்சாரத்திலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். ஏனெனில் அது வாரினால்      கட்டப்படவில்லை. 

ஆனால் நாய் எம்பிக் குதித்து B அறைக்கு ஓடவில்லை. வாரினால் கட்டப்பட்டு தப்பிக்க வழியில்லை என்று முடிவு கட்டிவிட்ட நாய் இப்போது வார்க்கட்டு இல்லாதபோதும் கூட பழைய பழக்கத்தினால் மின்சாரத்திலிருந்து தப்பிக்க முடியாமல் மின்சாரத்தை ஏற்றுக்கொண்டு துன்பப்பட்டது.

ஏனெனில் தன்னால் தப்பித்துக் கொள்ள இயலாது என்று நாய் ஒரு மனப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டதுதான் காரணம்.

இப்போது வாய்ப்பு இருந்தும் பிரச்சனைகளிலிருந்து விடுபட்டு மகிழ்ச்சியான  வாழ்க்கையை வாழ முடியாத மனிதர்களுக்கும், சோதனையின் நாய்க்கும்  வித்தியாசம் ஏதுமில்லை.

வாழ்க்கை சூழ்நிலையையும், நாய் சோதனையையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.

சோதனைப் பெட்டி நாம் வாழும் சூழ்நிலை,

மின்சாரம் நமக்கு ஏற்படும் துன்பம்,

வார்க்கட்டு பிரச்சனையிலிருந்து விடுபட முடியாத நிலை,

உயரம் குறைவான பலகை பிரச்சனைகளிலிருந்து விடுபட வழி,

வார்க்கட்டு அவிழ்க்கப்பட்டது மாறிய சூழ்நிலை,

பலகையை தாண்டி நாய் குதிக்க வேண்டும்.

பிரச்சனைகளிலிருந்து விடுபட கிடைத்த வழியை நாம் பயன்படுத்த வேண்டும்.

நாய் குதிக்கவில்லை.

நாமும் வழியை பயன்படுத்துவதில்லை.

இத்தனை நாள் என்னால் தப்பிக்க முடியவில்லை. இப்போது மட்டும் முடியுமா என்று நாய் நினைக்கிறது.

பிறந்ததிலிருந்து கஷ்டப்படுகிறேன், இப்போது மட்டும் அதிலிருந்து விடுபட முடியுமா என்று நாம் நினைக்கிறோம்.

ஏன்? 

மனதால் பழகிக் கொண்ட உதவியின்மைதான் காரணம்.

எனவே சூழ்நிலை மாறிக் கொண்டே இருப்பதை விழிப்போடு கவனிப்போமானால், கட்டவிழ்ந்தால் உடனே எட்டிக் குதிப்போம்.



Monday, April 11, 2011

மனோதத்துவம் - மன எழுத்து

முன்குறிப்பு: இந்த பதிவு ஒரு புத்தகத்திலிருந்து பகிரப்படும் செய்தி.

புத்தகம்: மனதை மேம்படுத்தும் மனோதத்துவம்

ஆசிரியர்: பா. செல்வராஜ்.

மன எழுத்து:

மனிதன் பிறக்கும் போது அவன் வாழ்க்கை எங்ஙனம் இருக்கும் என்று அவன் தலையில் எழுதப்பட்டு விடுகிறது. அதன் பின்பு தலையெழுத்து அல்லது விதிப்படிதான் எல்லாம் நடக்கும். யாராவதுடைய தலையெழுத்து நன்றாக இல்லையெனில் அவர் வாழ்க்கை நன்றாக அமையாது. அவருக்கு பல துன்பங்கள் நேரலாம். ஜாதகம், ஜோதிடம், நாடி ஜோதிடம் போன்றவைகளின் மூலம் நம் தலையெழுத்தையும் நமக்கு ஏற்பட்டுள்ள  தோஷங்களையும் அறிந்து கொள்ளலாம். அவற்றுக்கு பரிகாரங்கள் உண்டு. பரிகாரங்கள் செய்வதன் மூலம் தோஷங்களைக் கழிக்கலாம். மேலும் குறிப்பிட்ட சில கடவுளர்களை வழிபடுவதன் மூலம் நம் தலைவிதியின் கொடுமையை ஓரளவு தாங்கி நிற்கலாம் - இது நம்பிக்கை. 

ஆனால் ஒரு மனிதன் தலை விதியை தானே நிர்ணயித்துக் கொள்கிறான். அவனுடைய எண்ணம், சிந்தனைகளினாலேயே அவனுடைய வாழ்க்கை முறை நிர்ணயிக்கப்படுகிறது. 

மனிதனின் ஆளுமை அவனுடைய ஐந்து வயதுக்குள் நிர்ணயிக்கப்பட்டு விடுகிறது. குழந்தை ஐந்து வயது வரை தன் சூழ்நிலையை நன்கு கவனிக்கிறது. அதன் அடிப்படையில் தனக்குள்ள குறைவான அறிவைப் பயன்படுத்தி அறிவுப் பூர்வமற்ற சில தீர்மானங்களை எடுக்கிறது. அதன் பின்னர் அக்குழந்தை இறக்கும் வரை இவ்வறிவுப்பூர்வமற்ற தீர்மானங்களின் அடிப்படையிலேயே வாழ்க்கையை அமைத்துக் கொண்டு வாழ்கிறது. 

உதாரணமாக, சிலர் "நான் பிறந்ததிலிருந்தே இப்படித்தான்", "என் ஜாதகமே இப்படித்தான்", "எனக்கு எப்போதுமே இப்படித்தான் நடக்கும்", "என் ராசியே இப்படித்தான்" என்பது போன்று அடிக்கடி குழந்தைப் பருவத்தில் தான் எடுத்த அறிவுப்பூர்வமற்ற தீர்மானங்களின் அடிப்படையில் வாழ்க்கையை நடத்திக் கொண்டு இருப்பார்கள். இவ்வறிவுப்பூர்வமற்ற தீர்மானங்களையே மன எழுத்து (தலை எழுத்து அல்ல) என்கிறோம்.

இளம் வயது முதல் ஒருவர் வறுமையில் வாடுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் தன் வாழ்வில் சுக போகங்களை அனுபவிக்க எண்ணவே மாட்டார். தான் மிகவும் துன்பப்பட்டாலும் பிறரை மகிழ்ச்சியாக வைத்திருக்க முடிந்த அளவு முயற்சி செய்வார். ஒரு பொருளை அவருக்கென கொடுத்தால் கூட அதை தனது குடும்ப உறுப்பினர்களுக்கோ அல்லது பிறருக்கோ கொடுத்துவிட்டு தனக்குத்தானே தியாகிப் பட்டம் கட்டிக் கொள்வர்.  1  கோடி ரூபாய் கையில் இருந்தால் கூட ரோட்டோரம் உள்ள டீக்கடையிலேயே டீ குடிக்கச் செல்வார்.  மாறாக மிகப் பெரிய ஓட்டலுக்குச் செல்ல அவர் மனம் எண்ணாது.  இத்தகைய நபர் "நான் வறுமையில் வாடப் பிறந்தவன், சுகப்போகங்களை அனுபவிக்கப் பிறந்தவனில்லை" என்ற அறிவுப்பூர்வமற்ற தீர்மானத்தை தன் குழந்தைப் பருவத்தில் எடுத்து அதன் அடிப்படையில் தன் வாழ்வை நடத்திக் கொண்டு வருவார்.  அவரின் மன எழுத்து எப்போதும் "துன்பப் படு" என்பதாகும்.

ஒருவரின் மன எழுத்து அவருடைய வாழ்க்கையில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை மேற்கண்ட உதாரணத்தின் மூலம் அறியலாம்.  எனவே ஒவ்வொருவரும் தன் மன எழுத்தை அறிந்து கொள்ள முயல வேண்டும்.  அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதைக் காண்போம். 

அமைதியான சூழ்நிலையில் அமர்ந்து கொள்ளுங்கள்.  நீங்கள் குழந்தைப் பருவத்திலிருந்து இன்றைய நாள் வரை பல கதைகளைக் கேட்டிருப்பீர்கள்.  அக்கதைகள் எல்லாவற்றையும் நினைவுக்கு கொண்டு வாருங்கள்.  பின்னர் அக்கதைகளில் உங்களுக்கு மிகவும் பிடித்தமான, மனதை பாதித்த பாத்திரம் எது என்பதைக் கண்டறியுங்கள்.  இப்போது அப்பாத்திரத்தின் பண்புகள் யாவை என்ற வினா எழுப்பி அப்பண்புகளை ஆராய்ந்து பட்டியலிடுங்கள்.  அப்பண்புகளே உங்கள் பண்புகள்.  கதையில் அப்பாத்திரத்திற்கு இறுதியில் என்ன முடிவு ஏற்ப்படுகிறதோ அந்த முடிவையே உங்கள் ஆழ்மனம் விரும்புகிறது.  அதை நோக்கியே உங்கள் வாழ்க்கையும் சென்று கொண்டிருக்கிறது.  இறுதியில் உங்கள் ஆழ்மனம் விரும்புவதே நிகழப் போகிறது. 

நீங்கள் விரும்பும் பாத்திரம் நல்லதாக இருந்தால் நலமே.  அப்பாத்திரத்திற்கு கதையில் நன்றே நடக்கிறது என்றாலும் நலமே.  ஆனால் பாத்திரம் சோகமான பண்புகளே கொண்டுள்ளது என்றால் பிரச்சனைதான்.  பாத்திரத்திற்கு சோகமான முடிவு ஏற்படுகிறது என்றால் உங்கள் நிலைமை பரிதாபத்திற்குரியதுதான்.  தற்போது நீங்கள் உங்கள் மன எழுத்தை (தலை எழுத்து அல்ல) அல்லது மன விருப்பத்தை ஆராய்ந்து கண்டறிந்து விட்டீர்கள்.  தேவையானால் இம்மன எழுத்தை மாற்றுவது எங்ஙனம் என்பதைக் காண்போம்.

மீண்டும் அமைதி நிலைக்கே செல்லுங்கள்.  உங்கள் மனதிற்குள் பின்வருமாறு நீங்களே சொல்லிக் கொள்ளுங்கள்.

"எனக்கு சோகமான முடிவு ஏற்பட வேண்டும், வாழ்க்கை சோகமானதாக இருக்க வேண்டும் என்று அறியாப்பருவத்தில் முடிவெடுத்துள்ளேன்.  இத்தீர்மானத்தை எடுக்கும் சமயம் எனக்கு போதுமான அளவு அறிவு வளர்ச்சி ஏற்பட்டிருக்கவில்லை.  அப்போது எனக்கிருந்த குறைந்த அறிவின் அடிப்படையில் என்னைச் சுற்றி நடந்த நிகழ்ச்சிகளை மனதில் கொண்டு,  இத்தவறான தீர்மானத்தை எடுத்துள்ளேன்.  தற்போது இத்தீர்மானம் தவறு என்று நான் உணருகிறேன்.  மேலும் சரியான வாழ்க்கை முறை எது என்பதை நான் தற்போது அறிவேன்.  எனவே இந்த நிமிடம் முதல் என் பழைய தவறான தீர்மானத்தைக் கைவிட்டு வளர்ச்சியடைந்த என் அறிவின் அடிப்படையிலேயே என் வாழ்க்கையை நடத்தப் போகிறேன்".

அமைதியான சூழ்நிலையில் அமர்ந்து, தொடர்ந்து பல முறை மேற்கூறியவாறு உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொள்ளுங்கள்.  இவ்வாறு செய்தால் உங்கள் குழந்தைப் பருவ தவறான தீர்மானம் (மன எழுத்து - தலை எழுத்து அல்ல) நீங்கி புதிய முறையில் உங்கள் விருப்பப்படி வாழ்க்கை அமையும்.


Thursday, April 7, 2011

மனோதத்துவம்


நம்மில் பலர் மனம் சோர்வடைந்து, தான் என்ன செய்கிறோம் என்பதே புரியாமல், தான் செய்வது சரிதானே என்பதும் தெரியாமல் குழம்பி தவிக்கின்றனர்.

சமீபத்தில் எனக்கு ஒரு புத்தகம் கிடைத்தது. புத்தகத்தின் பெயர் "மனதை மேம்படுத்தும் மனோதத்துவம்". இதை எழுதியவர் கோவை அரசு கல்லூரியைச் சேர்ந்த  பேராசிரியர் "பா. செல்வராஜ்" அவர்கள்.

இந்த புத்தகம் படித்த பின்னர் என் மனம் சிறிது தெளிவு பெற்றது. நான் செய்யும் செயல்கள் சரிதான் என்பது புரிந்தது. பிரச்சனைகளுக்கு தீர்வு காணாமல் ஓடி ஒளிவதா என்ற என் கேள்விகளுக்கு இந்த புத்தகத்தில் பதில் கிடைத்தது.

என் நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்கள் அனைவருக்கும் இந்த புத்தகத்தை பரிசளிக்க வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் அது இயலாத காரியம். அதனால் நான் படித்து பயனுற்ற செய்திகளை இந்த வலை தளத்தில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

இந்த பதிவுகளை படிப்பவர்கள் மனம் நிச்சயமாக தெளிவு பெரும்.

ஒரு புத்தகத்தைப் படித்து அதில் உள்ள செய்தியை தளத்தில் எழுதுவது சரிதானா என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் இதைப் படிப்பதால் நண்பர்களின் மனம் தெளிவு பெரும் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன்.

குழம்பி தவிக்கும் மனங்களை தெளிவு படுத்த நான் எடுக்கும் ஒரு சிறு முயற்சி இது. அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.


Monday, February 14, 2011

காதலர் தினம்

என் வாழ்வில் மறக்க முடியாத தினங்களில் இந்த காதலர் தினமும் ஒன்று. 

காதலர் தினம் என்பது காதலர்களுக்கான ஒரு தினம். 

பள்ளியில் நண்பர்களாய் இருந்த நமக்கும் அதற்கும் என்ன சம்மந்தம் இருக்க முடியும்?

நம் மனதில் இருந்தது காதலா இல்லை நட்பா என்றே தெரியாத அந்த பள்ளிப் பருவத்தில், காதலர் தினத்தன்று உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும். இரவு எனக்கு போன் பண்ணு என்றாய். 

இதை நீ என்னிடம் சொல்லிய போது நீ ஏதோ ஒன்று என்னிடம் சொல்லும் ஆர்வத்தில் இருக்கிறாய் என்பது புரிந்தது. 

எனக்கும் அது பேரின்பமாகத்தான் இருந்தது. 

ஒருவேளை நீ என்னைக் காதலிக்கிறாயோ என்று அப்போதுதான் முதலில் எனக்கு ஒரு சிறு சந்தேகம் வந்தது. 

இரவு நீ சொன்ன நேரத்திற்கு உனக்கு போன் செய்தேன். 

காதலர் தின வாழ்த்துக்கள் என்றாய். 

அவ்வளவே. அதற்கு மேல் எதுவும் பேசாமல் போனை வைத்து விட்டாய். 

காலை உன்னிடம் இருந்த ஆர்வத்திற்கும், நீ பேசியதற்கும் சம்மந்தமே இல்லையே என்று தோன்றியது. நானும் கொஞ்சம் ஏமாந்துதான் போனேன்.
சமீபத்தில் தான் என்னிடம் ஒரு உண்மையை சொன்னாய். 

அன்று தோழியாய் இருந்த என்னிடம் நீ சொன்ன வாழ்த்தின் மூலம் மறைமுகமாக உன் காதலை சொல்லியிருக்கிறாய் என்று.

தலையில் போட்டுக் கொண்டேன். 

உன் காதல் அன்று எனக்கு சிறிதும் புரியவில்லையே. 

அந்த வயதில் காதலை வெளிபடுத்தக் கூட தெரியாமல் தான் இருந்திருக்கிறோம். 

நினைத்தால் வேடிக்கையாகத்தான் இருக்கிறது. 

வேடிக்கையாய் ஆரம்பித்த அந்த காதல் இன்று நம் வாழ்வில் வேரூன்றி நிற்கிறது. 

நான் வாழ்வதே உனக்காகத்தான். உன் காதலை மட்டும் அனுபவிப்பதற்காகத்தான் என்றாகி விட்டது. 

கெட்டிக்காரன் தான் நீ. 

நான் உனக்காகவே பிறந்தவள் என்று உன் காதலால் என்னை அந்த அளவிற்கு மாற்றி வைத்திருக்கிறாய்.   

என் உயிரில் கலந்தவனுக்கும், என் காதலை படித்துக் கொண்டிருப்பவர்களுக்கும் இனிய காதலர் தின வாழ்த்துக்கள் :)  


.

Saturday, February 12, 2011

நம் காதலர் தினம்

இன்னும் இரண்டு நாட்களில் காதலர் தினமாம்.

நமக்கு இன்றுதானே காதலர் தினம்.

நீ உன் காதலை எனக்கு தெரிவித்த நாள் தானே நமக்கு காதலர் தினமாக இருக்க முடியும்.

என்னை பொறுத்தவரை இந்த தினம் தான் எல்லா வருடங்களும் நமக்கு காதலர் தினம்.

இத்தனை ஆண்டுகளாய் அப்படித்தான் இருந்தது. இனியும் அப்படித்தான் இருக்கும்.

உன் காதலை உணர்ந்த அந்த ஒரு நொடி போதும் எனக்கு.

ஒட்டு மொத்த காதலர் தினங்களையும் ஒன்றாய் கொண்டாடிய மகிழ்ச்சி அது.

ஆனால் உன் காதலை அறிந்த அந்த நொடி என் கண்கள் சிந்திய கண்ணீர் துளிகளுக்கு என்ன அர்த்தம்?

யோசித்து பார்த்தேன்.

அதன்பின் தான் புரிந்தது. அதற்கு பெயர்தான் ஆனந்த கண்ணீர் என்று. எனக்கு தெரிந்து என் கண்கள் சிந்திய முதல் ஆனந்த கண்ணீர் கூட அதுவாகத்தான் இருக்க முடியும்.

நான்கு வருடங்களாய் என் மனதில் இருந்த காதல் உன் மனதிலும் இருக்கிறதா என்று தெரியாமல் நான் தவித்த தவிப்பு எனக்குதான் தெரியும்.  

இன்று சொல்வாயா, நாளை சொல்வாயா, இல்லை என்னைப் போல் உன் மனதில் காதலே இல்லையா என்று தினம் தினம் ஏங்கி தவித்துக் கொண்டிருந்த என் காதலுக்கு உன் காதல் தெரிந்ததும் அந்த பேரானந்தத்தில் செய்வதறியாது திகைத்து நின்றேன். 

அப்பொழுது என் காதல் என் கண்களில் கண்ணீர் துளிகளாய் தான் வெளிப்பட்டது.

நல்ல வேளை. உன் காதலை இரண்டு நாட்கள் கழித்து சொல்லாமல் விட்டாய்.

அப்படி சொல்லியிருந்தால் அனைத்து காதலர்களும் கொண்டாடும் அதே தினத்தில் தான் நாமும் நம் தினத்தை கொண்டாடி இருக்கக் கூடும்.

தனிமையை அதிகம் விரும்பும் நமக்கு இப்படி ஒரு தனித்த காதலர் தினம் கிடைக்காமலே போயிருக்கும்.

இதென்ன நீ முன்னதாகவே திட்டம் போட்டு செய்த வேலையா? இல்லை கடவுள் நமக்கென்று கொடுத்த அதிர்ஷ்ட தினமா? 

நேற்று உன்னிடம் சொன்னேன். நாளை நமக்கு காதலர் தினம் என்று. 
என்னை கேலி செய்தாய். 

ஆனால் இன்று காலை எதிர்பாரா விதமாய் மின்னஞ்சலில் உன் வாழ்த்துக்களை பார்த்தேன். 

"அன்புள்ள காதலிக்கு,

உன் இந்நாள் காதலன் வருங்கால கணவனின் இனிய காதலர் தின வாழ்த்துக்கள்.....

ஐ லவ் யு"

இதை படித்ததும் நீ உன் காதலை என்னிடம் வெளிபடுத்திய அந்த நிமிடங்களை நினைத்துப் பார்க்கிறேன்.

ஐயோ. என்னை அறியாமல் வரும் புன்னகையைப் பாரேன்.

அந்த புன்னகையிலும் கூட கண்கள் கலங்கத்தான் செய்கிறது.

உன்னோடு ஒரே இம்சையடா.

இப்படி சிரித்துக்கொண்டே கண் கலங்க வைக்கிறாய்.

ம்ம்ம். இருக்கட்டும். இதைப்போல இன்னொரு சந்தர்ப்பத்தில் கண் கலங்க வேண்டியிருக்கும்.

உன் காதல் அனைத்தையும் தாலியில் கோர்த்து என் கழுத்தில் அணிவித்து என்னை உன் மனைவியாக ஏற்கும் அந்த நொடிகளில்.

அதற்கான ஒத்திகையாய் இதை நினைத்துக் கொள்கிறேன்.

உயிரானவனே... 

என் ஒட்டு மொத்த அன்பையும் பெறுவதற்காக பிறந்தவனே...

என் இதயத்தில் நுழைந்து இம்சித்துக் கொண்டிருப்பவனே...

காதலின் அர்த்தத்தை எனக்கு புரிய வைத்தவனே...

இனிய காதலர் தின வாழ்த்துக்கள். 

 .

Tuesday, February 8, 2011

கிடைத்து விட்டது இன்னுமொரு பொக்கிஷம்

கிடைத்து விட்டது இன்னுமொரு பொக்கிஷம்.. உன் நினைவாக..

சாதரணமாக உன் கை பட்ட பொருட்களை பொக்கிஷமாக சேர்த்து வைப்பேன்.

முதல் முறையாக உன் கைபட்டு உடைந்த ஒரு பொருளை பொக்கிஷமாக வைத்திருக்கிறேன்.

எனக்கு மிகவும் பிடித்த இதய வடிவில் உள்ள என் ஹேர் கிளிப்.

வீட்டில் என் தங்கையை அதை தொட கூட அனுமதிக்க மாட்டேன். 

ஆனால் நீ அதை உடைத்ததில் அதிக மகிழ்ச்சி அடைந்தேனே.

நீ அதை அறியாமல் தான் உடைத்தாய். ஆனால் அதை பார்த்ததும் எனக்குள் எத்தனை சந்தோஷம். 

அப்பொழுதே கேட்டாய். 

இதையும் சேர்த்து வைக்க தானே போகிறாய் என்று. 

கிடைத்த பொக்கிஷத்தை விடுவேனா என்ன. 

கண்டிப்பாக சேர்த்து வைப்பேன் என்றேன்.

சிரித்தாய்.

என் பீரோவில் இதுவரை உன் நினைவாக சேர்த்து வைத்த பொக்கிஷங்களோடு அதையும் சேர்த்து வைத்தேன். 

பிற்காலத்தில் நீ அதை எப்படி உடைத்தாய் என்று நினைத்தால் இன்று மலர்ந்திருக்கும் இந்த காதல் அன்றும் சில காதல் மொட்டுக்களை மலர செய்யும். 
.



Monday, January 31, 2011

காதல் கண்ணாமூச்சி

நீ எங்கோ பார்க்கையில் நான் உன் கண்களைப் பார்க்கிறேன்.

உன் கண்கள் என்னைப் பார்க்கையில் நான் எங்கோ பார்க்கிறேன்.

இதென்ன நம் கண்கள் ஆடும் கண்ணாமூச்சி ஆட்டமோ?

நல்ல ஆட்டம் தான்.

இரண்டு கண்களும் மோதிக்கொள்ளாமல் இருந்தால் சரி தான்.

அப்படி மோதிக்கொண்டால் தான் என்ன?

அங்கேயும் புதிதாய் காதல் தானே பிறக்கப் போகிறது.

மோதல் என்றாலே அது ஒரு பிரிவுக்கு போடும் அஸ்திவாரமாம்.

ஆனால் கண்கள் மோதிக் கொண்டால் மட்டும் அது காதலுக்கு போடும் அஸ்திவாரமோ?

கண்கள் போடும் காதல் அஸ்திவாரம் மிகவும் வலிமையானது தான்.

எத்தனை முறை முயன்றாலும் என் மனதிலிருந்து காதலை பிரித்தெடுக்க முடியவில்லையே.

தினம் தினம் இந்த கண்ணாமூச்சி ஆட்டத்தால் என் மனதில் காதல் அஸ்திவாரம் போட்டுக்கொண்டே இரு.

அதற்காக படைக்கப்பட்டது தானே என் கண்களும், மனமும்.
.


Saturday, January 29, 2011

இதய கருவறை




என் இதயத்திற்கும்
கருவறை உண்டு

என் ஆயுள் உள்ள வரை
உன்னை சுமக்கும்
கருவறை அது

மறந்தும் அதை விட்டு
வெளியே வந்துவிடாதே

மறு நிமிடமே
என் இதயம்
நொறுங்கிப் போகும்

அவன் இல்லாத இடத்தில்
நான் மட்டும்
எதற்கு என்று என்
உயிரும் என்னை விட்டு
பிரிந்து போகும்.
.


காதல் செய்யும் மாயம்


























கண்ணாடியில்
என் உருவத்தைப்
பார்ப்பதை விட
உன் கண்களில் என்
உருவத்தை பார்க்கும் பொழுது
அழகாய்த் தெரிகிறேன்

உன் கண்களில் உள்ள
காதல் செய்யும்
மாயம் தானோ அது.



Friday, January 28, 2011

காதலின் கனவு

உன்னைப் பற்றி ஏதேனும் எழுதலாமே என்று நினைத்து என் காதலை தட்டி எழுப்பி, பேப்பரையும் பென்சிலையும் எடுத்து வைத்து அமர்ந்தேன்.

என் காதல் தான் ரொம்ப சமத்தாயிற்றே.

உன்னைப் பற்றிய நினைவுகள் ஒவ்வொன்றாய் என் கண் முன் கொண்டு வந்து நிறுத்தியது.

இதைப் பற்றி எழுதலாமா, அதை பற்றி எழுதலாமா என்று யோசித்துக்கொண்டே வந்தேன்.

நடுவில் தடுமாறி நின்று விட்டேன்.

உன் நினைவுகளை எடுத்துக் காட்டிக் கொண்டிருந்த என் காதலை காணவில்லை.

எங்கே என்று பார்த்தால் என் உயிரின் ஓரமாய் நின்று உன்னைப் பற்றி கனவு கண்டு கொண்டிருக்கிறது.

ஆனால் எதுவும் நல்ல கனவாக இல்லையே.

கெட்டப் பையன்.

என் காதலை நன்றாக கெடுத்து வைத்திருக்கிறாய்.

என்னை எந்த வேலையையும் உருப்படியாக செய்ய விடுவதே இல்லை. உன்னைப் பற்றி கனவு காணுவதைத் தவிர.

பேப்பரை மடித்து வைத்து விட்டேன்.

என் காதலோ கனவுகளின் வாசலில் நின்று ஊஞ்சல் கட்டி ஆடிக்கொண்டிருக்கிறது.



.

Thursday, January 27, 2011

என் மனதை நீயே வைத்துக்கொள்

என் மனதிற்கு பித்து பிடித்திருக்கிறது என்று நினைக்கிறேன்.

நான் சேர்த்து வைத்திருக்கும் காதலை எல்லாம் உன்னிடம் வெளிபடுத்தக்கூடவா தெரியவில்லை அதற்கு.

நீ பக்கத்தில் இல்லாத நேரங்களில் ஆயிரம் கனவுகள் காணுகிறது.

உன்னிடம் நிறைய பேச வேண்டும், உனக்கு முத்தமிட வேண்டும் என்றெல்லாம் கனவுகள்.

ஆனால் உன்னைக் கண்டதும் கனவுகள் எல்லாம் மனக் கதவை திறந்து வெளியே ஓடி வர மறுக்கிறதே.

என்னைப் போல அதற்கும் வெட்கமா என்ன?

இப்படி ஒரு வெட்கம் தேவையா அதற்கு?

நீ உன் காதலை வெளிபடுத்தும் பொழுதெல்லாம் அதை ஆனந்தமாய் அனுபவிக்கிறது.

ஆனால் என் மனதில் இருக்கும் காதலை அதற்கு வெளிபடுத்த தெரியவில்லையே.

நீ ஆசையாய் முத்தமிட வரும் பொழுது கூட என்னை தயங்கதானே வைக்கிறது.

அப்படி என்னதான் பிரச்சனை என் மனதிற்கு?

பேசாமல் என் மனதை நீயே வைத்துக்கொள்.

உனக்குள் இருந்தால் காதல் செய்வது எப்படி என்று அதற்கு தெரிந்துவிடும்.


.

Tuesday, January 25, 2011

அண்ணனுக்கும் தோழனுக்கும் நன்றி

பிரிவில்லாத காதலும் இல்லை.

துன்பத்தை தாங்காத காதலும் இல்லை.

உண்மையான காதலில் பிரிவு நிரந்தரமாக இருக்க முடியாது. ஆனால் ஒருவரின் காதல் மட்டும் உண்மையாக இருந்து  மற்றொருவர் அதை சரியாக புரிந்து கொள்ளவில்லை எனில் அங்கே பிரிவு நிரந்தரமாகி விடும்.

இருவரின் காதலும் உண்மையாக இருந்து, சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக பிரிவென்னும் படுகுழியில்  விழுந்தவர்களும் உண்டு.

மனதில் உள்ள காதலை வெளிபடுத்தாமல் மறைத்து அதனால் பிரிந்த காதலும் உண்டு.

இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் என் காதலும் பிரிவு, அளவில்லா துன்பம் அனைத்தையும் சுமந்து வந்தது தான்.

எங்கள் காதல் வாழ்க்கையில் நாங்கள் சேர்ந்து இருந்ததை விட பிரிந்திருந்த காலங்கள் தான் அதிகம்.

அதற்கு காரணங்கள் உண்டு.

அதில் முதல் காரணம் அவன் காதலை வெளிபடுத்திய போது அவன் குடும்பத்திற்காக அவனை விட்டு கொடுப்பதாக நினைத்து என் காதலை நான் மறைத்தது தான்.

அன்று என் காதலை வெளிபடுத்தாமல் விட்டதால் கிட்ட தட்ட ஐந்து வருடங்கள் இருவரும் வாழ்வோடு போராடிக்கொண்டு தான் இருந்தோம்.  

ஏன் வாழ்கிறோம்? எதற்காக வாழ்கிறோம்? யாருக்காக வாழ வேண்டும்? என்ற கேள்விகளோடு தான் எங்கள் இருவரின் வாழ்க்கையும் ஓடியது.

என்றாவது எங்கள் காதலுக்கு விடிவு காலம் வரும் என்ற நம்பிக்கையும் இரண்டு வருடங்களுக்கு முன்பு புதைந்து போனது. 

அவன் வாழ்வில் இனி என் பங்கு எதுவும் இருக்க கூடாது என்று நினைத்து அவனை விட்டு விலகி விட்டேன்.

அதன் பின் எங்கள் இருவருக்கும் நடுவில் எந்த தொடர்பும் இல்லை.

அப்பொழுது தான் அவன் கல்லூரி நண்பன் ஆனந்த் அண்ணா எனக்கு அறிமுகமானார்கள்.

அவ்வப்போது அவர்களிடம் மட்டும் அவனை பற்றி கேட்டு தெரிந்துகொள்வேன்.

அவர்கள் முதல் பிரிவு என்று ஒரு வலை தளம் எழுதி வருகிறார்கள்.

ஒரு நாள் நீயும் உன் மனதில் உள்ளதை எழுதலாமே என்று அவர்கள் சொன்ன அந்த வார்த்தை தான் என் காதல் எனக்கு திரும்ப கிடைத்ததற்கு காரணம்.

இதை சொல்லும் பொழுதே கண்களில் கண்ணீர் வருகிறது.

தொடக்கத்தில் பொழுது போக்கிற்காக தான் எழுத தொடங்கினேன்.

ஒரு நாள் அண்ணா, நீ கதை எழுதலாமே என்றார்கள்.

எனக்கெல்லாம் கதை எழுத வருமா என்று நினைத்தேன்.

தினமும் இரவு நிலைவை பார்க்க வெளியே வருவேன். அப்படியே சிறிது நேரம் அங்கும் இங்கும் சுற்றி திரிவேன். அன்றும் அப்படி தான் சுற்றிக்கொண்டிருந்த போது மனதில் ஒரு கதை தோன்றியது.

கதை என்றாலும் என் வாழ்வில் நடந்ததை இணைக்காமல் என்னால் எழுத முடியவில்லை. எனக்கும் என்னவனுக்கும் இடையில் நடந்த சிறு சிறு விஷயங்களையும் சேர்த்து எழுத தொடங்கினேன்.

அதன் பின் கதை எழுதுவதில் ஆர்வம் அதிகமானது.

சில நாட்களிலேயே என்னவனின் நினைவுகளும் அதிகமாகி விட்டது.

என்னவனும் என் பதிவுகளை படித்து வருகிறான் என்று அவன் நண்பர்கள் மூலமாக தெரிய வந்தது.

அந்த நிலையில் தான் என் காதல் தொடங்கிய நாளிலிருந்து முடிவுற்றதாக நினைத்த நாள் வரை அனைத்தையும் ஒரு கதையாக எழுதலாமே என்று தோன்றியது.

அண்ணனும் இதை மட்டும் நீ எழுதிவிட்டால் உன் வாழ்வில் கண்டிப்பாக நல்ல திருப்பம் கிடைக்கும். விரைவில் எழுதி முடி என்று எனக்கு ஊக்கமளித்தார்கள்.

10 நாட்கள் கண்ணீரோடு முடிவுறா காதல் என்ற தலைப்பில் என் காதல் வரலாற்றை எழுதினேன்.

அதை பதிவிட்ட பின்னர் செத்துவிடலாம் என்று கூட தோன்றியது.

ஏனென்று அந்த கதையை படித்தால் உங்களுக்கே புரியும்.

என் மனம் எந்த நிலையில் இருந்தது என்பதை என்னவனிடம் நான் கூறியதே இல்லை. அவை அனைத்தையும் அந்த கதையில் தான் எழுதியிருந்தேன்.

அவனுக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் சொல்லி முடித்தபின் எதற்காக வாழ வேண்டும். நிம்மதியாக செத்துவிடலாம் என்று தான் தோன்றியது.

ஆனால் அதை பதிவிட்ட நாளே என் காதல் எனக்கு திரும்ப கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை வந்து விட்டது.

காரணம் எங்கள் இருவரின் பள்ளி நண்பன் பாலா.

என்னவன் அந்த கதையை படித்துவிட்டு பாலாவை வீட்டிற்கு வர சொல்லி இரவு முழுதும் அவனை தூங்க விடாமல் புலம்பி தள்ளியிருக்கிறான்.

மறுநாள் பாலாவிடம் பேசிய பொழுது அவன் உன்னை மறக்கவில்லை, என்னை பார்க்கும் பொழுதெல்லாம் அவன் உன்னை பற்றி கேட்காத நாளே இல்லை, உன் குரலை கேட்க விரும்பும் பொழுதெல்லாம் என்னை உனக்கு போன் பண்ண சொல்லி ஸ்பீக்கரில் போட சொல்லி  அவன் கேட்பான் என்று ஒவ்வொன்றாக கூற தொடங்கினான்.

கடைசியாக ஒருமுறை என்னவனை சந்தித்து பேச வேண்டும். முடியுமா என்று பாலாவிடம் கேட்டேன்.

அவனை அனுப்பி வைக்க வேண்டியது என் பொறுப்பு. ஆனால் இம்முறையாவது உன் மனதில் இருப்பதை அவனிடம் மறைக்காமல் சொல்லிவிடு என்று கூறினான்.

ஆனந்த் அண்ணாவும் இதுதான் உனக்கு கடைசி வாய்ப்பு. இதையும் நழுவ விட்டு விடாதே என்றார்கள்.

அடுத்த வாரமே என்னை காண வருவதாக என்னவன் கூறினான்.

இரண்டு வருடங்களுக்கு பின் சந்திக்க போகிறோம். அதுவும் என்னை விட்டு சென்றதாக நினைத்த என் உயிரை. அந்த வாரம் முழுவதும் என் இதய துடிப்பு அதிகமாகவே இருந்தது.

காலம் கடத்தியது போதும். கண்டிப்பாக என் காதலை அவனிடம் சொல்லிவிட வேண்டும் என்ற முடிவோடு இருந்தேன்.

இருவரும் சந்தித்தோம்.

இருவரும் மனதில் பூட்டி வைத்திருந்த காதல் அனைத்தையும் மனம் விட்டு பகிர்ந்தோம்.

இருவர் மனதிலும் இருப்பதை முழுமையாக தெரிந்து கொண்ட பின் , இனி எதற்காகவும் நம் காதலை விட்டுகொடுக்க வேண்டாம் என்று முடிவெடுத்தோம்.

ஆனந்த் அண்ணா, நண்பன் பாலா இருவரும் இல்லை என்றால் அந்த கதையை நான் எழுதியிருக்கவே மாட்டேன். என்னவன் என்னை மறக்கவில்லை என்பதும் எனக்கு தெரியாமலே போயிருக்கும். நாங்களும் சேர்ந்திருக்க மாட்டோம்.

மனிதர்களுக்கு உதவி செய்ய கடவுள் ஒரு மனிதனாகவே உருவெடுத்து வந்து அவர்களுக்கு ஒரு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுப்பார் என்று சொல்வார்கள்.

அப்படி என் வாழ்வில் மனித உருவெடுத்து வந்த கடவுள் அண்ணனும், பாலாவும் தான்.

நாங்கள் சேர கடவுள் ஏற்படுத்தி கொடுத்த ஒரு வாய்ப்பு தான் இந்த வலை தளம்.

அண்ணனுக்கும், பாலாவுக்கும் நன்றி சொல்லியே ஆக வேண்டும்.

ஆனால் நன்றி என்ற ஒரு வார்த்தை இருவருக்கும் போதாது.

காலம் முழுவதும் இருவருக்கும் நான் கடமை பட்டிருக்கிறேன்.

என் வாழ்வை திருப்பி கொடுத்த இருவரையும் உயிருள்ள வரை மறக்க மாட்டேன்.



காதலிப்பவர்களுக்கு:

1. ஒருவரை நீங்கள் காதலிக்கிறீர்கள் என்றால் மனம் திறந்து அவர்களிடம் காதலை தெரிவித்து விடுங்கள். காதலை சொல்வதற்கு தயங்கினால் தெரிந்தும் உங்கள் காதலை நீங்களே புதைக்கிறீர்கள் என்று தான் அர்த்தம்.

2.  காதலை சொன்ன பின் எந்த சூழ்நிலையிலேயும் தவறு செய்து விட்டோம் என்று நினைத்து விடாதீர்கள். அது காதலுக்கும், உங்களை காதலிப்பவருக்கும் செய்யும் பெரும் துரோகம்.

3. காதலில் பொறுமை அவசியம். சிறு சிறு பிரச்சனைகளால் ஒருவர் கோவப்பட்டு பிரிந்து போனால் நீங்களும் அவர் வேண்டாம் என்று முடிவு செய்திட வேண்டாம்.  கண்டிப்பாக அந்த கோவம் தீர்ந்ததும் அவரே உங்களை தேடி வருவார். வரவில்லை எனில் நீங்கள் அவரிடம் பொறுமையாக பிரச்சனை என்னவென்று கேட்டு சமாதானப் படுத்தலாம். கண்டிப்பாக நல்ல தீர்வு கிடைக்கும். அதை விட்டுவிட்டு காதலே வேண்டாம் என்று முடிவெடுத்தால் துன்பம் உங்களை அணைத்துக் கொள்ளும்.

காதலில் தோல்வியுற்றவர்களுக்கு:

காதலில் தோல்வி அடைந்தவர்களுக்கு நான் சொல்ல நினைப்பது ஒன்று தான். சந்தர்ப்ப சூழ்நிலையில் உங்களை காதலித்தவருக்கு வேறு ஒருவரோடு திருமணம் நடந்து விட்டால் அதன் பின் அவர் வாழ்வில் குறுக்கிட வேண்டாம். நீங்கள் அவரை நினைத்து கண்ணீர் சிந்துகிறீர்கள் என்று கூட அவருக்கு தெரியபடுத்த வேண்டாம். அது அவரின் வாழ்வையும், அவரை நம்பி வந்தவரின் வாழ்வையும் அழித்துவிடும்.  நீங்கள் அவரை விட்டு விலகி போவதுதான் உங்கள் காதலுக்கு மரியாதை.


.

என் முதல் குழந்தை நீ

ஒரு நாள் திடீரென்று நீ என் தோழி என்றாய்.

இதைப்போல் பலமுறை கூறியிருக்கிறாய்.

ஆனால் எனக்கோ உன் காதலியாக இருக்க மட்டுமே விருப்பம்.

அதனால் நான் உனக்கு தோழி இல்லை என்றேன்.

அப்படியென்றால் தங்கை என்றாய்.

பதறி போனேன்.

நான் உன்னை அண்ணா என்று அழைக்கிறேன். ஆனால் நீ என்னை தங்கை என்று அழைத்து விடாதே என்றேன்.

அதென்ன நீ மட்டும் கூப்பிடுவது என்றாய்.

ஆமாம். ஐயர் ஆத்து பாஷையில் என் கணவனை அண்ணா என்று அழைக்கலாமே என்றேன்.

அப்படியென்றால் நீ என் சின்னம்மா என்றாய். 

அப்படியே ஒவ்வொன்றாய் அடுக்கிக்கொண்டே போனாய்.

"அம்மா, சின்னம்மா, அக்கா, தங்கை....." என்று.

ஏய் நிறுத்து. நீ என்ன பைத்தியமா என்று உன்னை திட்ட ஆரம்பித்தேன்.

எனக்கு என் உறவுகள் அனைத்துமே நீதானடி என்றாய்.

நீ சொன்ன அந்த வார்த்தையில் என் கோவம் கதிரவன் பட்ட பனி போல உருகி போனது.

என் மனதையும் சேர்த்துதானடா உருக்கிவிட்டாய்.

இதற்கு தான் இத்தனை நேரம் இப்படி பிதற்றிக் கொண்டு இருந்தாயா என்றேன்.

ஆமாம். நான் உன்னை அம்மா என்று அழைக்கவா? என்றாய்.

வாயடைத்துப் போனேன்.

எப்படி உனக்கு மட்டும் இப்படியெல்லாம் தோன்றுகிறது?

இப்பொழுதெல்லாம் சில நேரங்களில்  நீ என்னை அம்மா என்று தான் அழைக்கிறாய்.

தன் கணவன் தான் ஒரு மனைவிக்கு முதல் குழந்தையாக இருக்க முடியும்.

ஆனால் என் காதலனாகவே நீ எனக்கு முதல் குழந்தையாக மாறி விட்டாயே.

ஆனால் ஒன்று.

மீண்டும் மீண்டும் நீ நிரூபித்துக்கொண்டே தான் இருக்கிறாய்.

நீ ஒரு காதல் பைத்தியம் என்று.

இல்லை இல்லை. என்னை உன் மீது பைத்தியமாக்கிக் கொண்டிருக்கும் ஒரு காதல் பைத்தியம்.


.

Saturday, January 22, 2011

இன்று நம் காதலுக்கு பத்தாவது பிறந்த நாள்

ஜனவரி 22. நம் வாழ்வில் வசந்தம் வீசிய நாள்.

நினைவிருக்கிறதா. ஒன்பது வருடங்களுக்கு முன்பு அன்று தான் நாம் இருவரும்  முதலில் பேசினோம்.

இருவரும் ஒரே பள்ளியில் தான் படித்தோம். நம் பள்ளியில் இரு பாலரும் பேசிக்கொள்ள அனுமதி இல்லை என்பதால் அதற்கு முன்பு வரை இருவரும் பேசிக்கொண்டதே இல்லை.

எதிர்பாரா விதமாய் அன்றுதான் முதலில் நாம் இருவரும் பேசும் வாய்ப்பு கிடைத்தது.

அன்று நட்பாய் தொடங்கியது நம் பழக்கம்.

சில நாட்களிலேயே நட்பென்னும் மொட்டு விரிந்து காதல் மலர தொடங்கிவிட்டது. ஆனால் இருவருமே அதை வெளிக்காட்டி கொள்ளாமல் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருந்தோம்.

அந்த விளையாட்டு கூட நன்றாகத்தானே இருந்தது.

கிராமத்து காதலில் அதிக சுவாரஸ்யம் உண்டு என்பது உண்மை தான்.

நாம் பேச வேண்டும் என்று நினைப்பதை பேச முடியாமல் தவித்த தவிப்புகள் இருக்கிறதே... ஒவ்வொரு தவிப்பும் உயிரை கசக்கி எடுக்கும் பேரின்பங்கள்.

ஆனால் ஒன்று. நம் கண்கள் பேசிக்கொண்டு தானே இருந்தது.

அடிக்கடி கிளாஸ் ரூமில் நீ என்னை திரும்பி பார்ப்பது, லேபில் இருவரும் கண்களால் பேசிக்கொள்வது... அய்யோ... நினைத்துப் பார்த்தால் இப்பொழுதும் மனசுக்குள் பட்டாம் பூச்சிகள் சிறகடிக்கிறதே.

நீ என்னைப் பார்த்த அந்த பார்வைகள் இருக்கிறதே.. அனைத்தும் என் மனதில் அழுத்தி வரையப்பட்ட ஓவியங்கள்.

எப்பொழுதேனும் என் வீட்டிருக்கு போன் செய்வாய்.

ஆனால் ஐந்து நிமிடங்களுக்கு மேல் பேச முடியாது நம்மால். அந்த நிமிடங்கள் கூட யாருக்கும் தெரியாமல் பயந்துதான் பேச வேண்டியிருக்கும்.

அந்த நேரத்தில் இதயம் துடிக்கும் துடிப்பு இருக்கிறதே... அத்தனையும் காதலின் துடிப்புகள்.

அதையெல்லாம் இப்பொழுது நினைத்தாலும் மலரும் நினைவுகளாய் மனதில் மலர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

அன்று அழகாய் சிறு சிறு அரும்புகள் விட்ட நம் காதல் இன்று வேரூன்றி ஆலமரமாய் வளர்ந்து நிற்கிறது.

இன்று நம் காதலுக்கு பத்தாவது பிறந்த நாள்.

பிறந்த நாள் பரிசாய் என்ன தர போகிறாய் என்று கேட்டாய்.

இந்த பிறந்த நாளை காதலர்களாய் கொண்டாடுவோம்.  பரிசாக ஒரு முத்தம் தருகிறேன்.

அடுத்த பிறந்த நாளை கணவன், மனைவியாய் கொண்டாடுவோம்.  அப்பொழுது பரிசாக நம் காதல் அனைத்தையும் கருவாக்கி உனக்கொரு உயிரைத் தருவேன்.



.


Friday, January 21, 2011

என்னவனின் காதல்





















காதலே என் எதிரியானது
காதலும் உன்னைக் காதலிப்பதால்...

இது நான் எழுதியது இல்லை.

என்னவன் என் தளத்தில் வந்து கிறுக்கியிருக்கிறான் :)

தோன்றும் பொழுதெல்லாம் இப்படி தான் ஏதேனும் கிறுக்கி தன் காதலை வெளிபடுத்தி விட்டு செல்கிறான் எனக்கென்று பிறந்தவன் :)



.

மறவாமல் வாங்கி வா

மணி பார்க்க கை கடிகாரத்தைப் பார்த்தால் நான் உன்னோடு இருந்த நேரங்களையே சுற்றி சுற்றி காட்டுகிறது.

வாங்கி கொடுத்தது நீ என்றால் வேறு எந்த நேரத்தைக் காட்டும்.

நீ வாங்கி கொடுத்த நெயில் பாலிஷை உபயோகிக்காமல் அப்படியே வைத்திருக்கிறேன்.

பரவாயில்லை இருக்கட்டும்.

என் நகத்தில் பூசி அழிந்து போவதை விட உன் காதலைப் போல் குறையாமல் உள்ளேயே இருக்கட்டும்.

நீ கொடுத்த விநாயகரைக் கூட பீரோவில் வைத்து பூட்டி தான் வைத்திருக்கிறேன்.

வெளியே வைத்தால் தூசிதான் படியும். ஆனால் உள்ளே அடைபட்டு இருந்தாலும் நம் காதல் அவரை பூஜித்துக் கொண்டுதானே இருக்கிறது.

நம் காதல் செய்யும் பூஜையை அவர் என்ன வேண்டாம் என்றா சொல்லிவிட போகிறார். அதனால் அவரும் பத்திரமாக அங்கேயே இருக்கட்டும்.

நீ வாங்கி கொடுத்த ஜிமிக்கியை அணியும் போது எத்தனை பேரின்பம் தெரியுமா.

என் கன்னங்களை உரசிக்கொண்டே இருக்கிறதே. நீ என் பக்கத்தில் இருக்கும் போது உன் இதழ்கள் என் கன்னங்களை உரசுவது போல.

நீ வாங்கி கொடுத்தவற்றை என் உடம்பில் அணியும் பொழுது எத்தனை சுகம். அத்தனையும் காதலின் சுகம்.

உன்னிடம் இன்னும் ஒன்று கேட்க போகிறேன்.

மறுமுறை என்னைக் காண வருகையில் மறவாமல் பூ வாங்கி வா. உனக்கு பிடித்த மல்லிகை பூ.

என் காதலுடன் பூவின் வாசனையும் சேர்ந்து உன்னை மயக்கட்டும்.



.

Thursday, January 20, 2011

நம் குடும்பம்

அதென்ன அப்படி ஒரு மரியாதை, பாசம் உன் குடும்பத்தின் மேல்.

அதுவும் குறிப்பாக என் மாமியார் மீது. என் உயிரை கருவறையில் சுமந்த காரணத்தினாலோ.

உன் குடும்பத்திலுள்ள அனைவரிடமும் பேசி பழக வேண்டும் என்று எனக்கு மிகவும் ஆசை. ஆனால் அது இப்பொழுது முடியாதே.

நீ ஊருக்கு செல்லும் பொழுதெல்லாம் உன் குடும்பத்தில் உள்ள அனைவரையும் புகைப்படம் எடுத்து அனுப்பச் சொல்லுவேன்.

நீயும் அனுப்புவாய்.

ஒருமுறை உன் அண்ணனை எதிர்பாராத  விதமாய் சாலையில் பார்த்தேன். நான் அவர்களை நீ அனுப்பிய புகைப்படங்களில் பார்த்திருந்ததால் எனக்கு அடையாளம் தெரிந்தது.

உனக்கு அடுத்து உன் குடும்பத்தில் உன் அண்ணனை தான் பார்த்திருக்கிறேன்.

பார்த்த வினாடியே என் மனம் மகிழ்ச்சியில் உறைந்து போனது. என்னவனுக்கு மூத்தவர் ஆயிற்றே.

சிறிது நேரத்திற்கு அத்தானை ஆச்சர்யமாய் பார்க்க, அவர்களோ இவள் ஏன் காணாததைக் கண்டது போல் இப்படி பார்க்கிறாள் என்பது போல் என்னைப் பார்த்தார்கள்.   

என்ன செய்வது. என்னால் பார்க்கத்தான் முடிந்தது. உங்கள் தம்பியை கட்டிக்கப் போறவள் நான் தான் அத்தான் என்று என்னால் சொல்ல முடியவில்லையே.

என் மாமியாரின் குரலைக் கேட்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை.

அவ்வப்போது சும்மாவேனும் உன் வீட்டிற்கு போன் செய்து உன் அம்மா ஹலோ சொன்னதும் உங்கள் வீட்டில் இல்லாத ஒரு பெயரைச் சொல்லி இருக்கிறார்களா என்று கேட்பேன்.

உன் அம்மாவும் "இல்லையம்மா. இங்கு அப்படி யாரும் இல்லை" என்பார்கள். 

நானும் "மாமியாரிடம் பேசிவிட்டேன்" என்று குதிக்கும் என் மனதை அடக்கிக்கொண்டு வைத்து விடுவேன். 

பாவம் என் மாமியாருக்கு தெரியவில்லை. வீட்டிற்கு வரப்போகும் மருமகள் தான் இப்படி விளையாடிக் கொண்டிருக்கிறாள் என்று. 

எத்தனை நாள் தான் ஒரே வசனத்தை திரும்ப திரும்ப கேட்பது. 

நீயும், என் அத்தையும் உரையாடுவதை கேட்க வேண்டும் என்று புதிதாய் ஒரு ஆசை கிளம்பியது. 

ஒரு முறை உன்னிடம் அலைபேசியில் பேசும் பொழுது "என் அத்தையின் குரலைக் கேட்க வேண்டும்" என்றேன். 

"அப்படியே லைனில் இரு. கான்பரன்ஸ் போடுகிறேன். அமைதியாக கேள்" என்றாய். 

நான் என்ன வேண்டாம் என்றா சொல்லப் போகிறேன். "சரி" என்றேன். 

அன்றுதான் முதல் முறையாக நீ உன் அம்மாவிடம் திக்கித் திணறி பேசினாய். 

காதலி இடையில் இருக்கும் பொழுது அம்மாவிடம் பேசினால் திக்காமல் வேற என்ன செய்யும்.

உன் திணறலைக் கண்டு என் காதல் என்னிடம் "உன்னவனின் திணறலைப் பார்த்தாயா" என்று கேலி செய்ய ஆரம்பித்து விட்டது. 

உங்கள் இருவரின் உரையாடலையும் என் மொபைலில் பதிவு செய்து கொண்டேன். 

என் மாமியார் நினைவு வரும் பொழுதெல்லாம் அதை கேட்பேன். 

நம் திருமணத்திற்குப் பின்  அத்தைக்கு இதெல்லாம் தெரிய  வேண்டும். அவ்வளவுதான். நம் இருவரையும் உதைக்க போகிறார்கள். 



.  

நம் காதல் சின்னம்

ஒருமுறை நிலவை பார்த்துக்கொண்டே இருவரும் அலைபேசியில் பேசிக்கொண்டிருந்தோம்.

"நிலவை பார்த்தால் உனக்கு என்ன தோன்றுகிறது" என்றேன்.

"ஏன் நிலவில் உன் முகம் தெரிகிறதா என்று கேட்க போகிறாயா" என்றாய் கேலியாக.

"இல்லை. இல்லை. இப்பொழுது நீ ஏன் பக்கத்தில் இருக்கிறாய்" என்றேன்.

"நான் உன் பக்கத்திலா?"  புரியாமல் கேட்டாய்.

"ஆமாம். நீ எங்கோ இருக்கிறாய். நான் எங்கோ இருக்கிறேன். ஆனால் நீ பார்க்கும் அதே நிலவை நானும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அதனால் நீ என் பக்கத்தில் இருப்பது போல் தோன்றுகிறது" என்றேன்.

அதற்குப்பின் நீ எப்பொழுது நிலவைப் பார்த்தாலும் என்னிடம் சொல்வாய்.

நானும் வெளியே ஓடி வந்து நிலவைப் பார்க்கிறேன்.

சிறுவயதில் ஒருமுறை நானும் அம்மாவும் சாலையில் நடந்து கொண்டிருக்கும் பொழுது தூரத்தில் தெரிந்த மின்னலைப் பார்த்து கண்களை மூடிக்கொண்டேன். 

"தூரத்தில் தெரியும் மின்னல் உன் கண்களை ஒன்றும் செய்யாது. அழகைப் பார்த்தால் ரசிக்க வேண்டும்.  கண்களை மூட கூடாது" என்றார்கள்.

அம்மா சொன்னதைக் கேட்டபின் தான் நான் இயற்கையை ரசிக்கவே ஆரம்பித்தேன்.

தினமும் வெளியே வந்து கொஞ்ச நேரம் நிலவை ரசித்துவிட்டு போவேன்.

ஆனால் எப்பொழுது நிலவைப் பார்க்கும் பொழுது நீ என் பக்கத்தில் இருப்பதாக உணர்ந்தேனோ அதன்பின் நிலவு நமது காதல் சின்னமாகவே மாறிப்போனது.

ஆனால் இருவரும் தனித்தனியே ரசிக்கும் நிலவை சேர்ந்து ரசிக்க வேண்டுமென்று விரும்பினேன்.

அந்த ஆசையும் ஒருநாள் நிறைவேறியது.

ஒரு மாலைப் பொழுது உன்னுடன் இருக்கையில் எப்பொழுது நம் காதல் சின்னம் கண்ணில் தென்படும் என்று காத்திருந்தேன். நிலவு தன் முகத்தைக் காட்டத் தொடங்கியதும் உன்னிடம் சொன்னேன்.

அன்று இருவரும் சேர்ந்து நம் காதல் சின்னத்தை பார்த்து ரசித்தோம்.

என் ஆசை நிறைவேறி விட்டது. ஆனால் உனக்கு வேறு ஒரு ஆசை உள்ளது.

"நம் திருமணத்திற்கு பின் மொட்டை மாடியில் என் மடியில் படுத்துக்கொண்டு இருவரும் நிலவை ரசிக்க வேண்டும்" என்றாய்.  

நீ என் பக்கத்தில் இருக்கும் பொழுது நிலவை ரசிக்க போகிறேனோ அல்லது உன்னை ரசிக்க போகிறேனோ தெரியவில்லை. 

எனக்கு இன்னும் ஒரு ஆசை உள்ளது. 

நட்சத்திரங்களில் ஊஞ்சல் கட்டி அதில் ஆடிக்கொண்டே நிலவை ரசிக்க வேண்டும். 

நடக்காது என்று தெரியும். ஆனால் என்ன செய்வது. நீ என் பக்கத்தில் இருக்கும் தருணங்களை நினைக்கும் பொழுது இப்படித்தான் ஆசைகள் தோன்றுகிறது. 



. 

Wednesday, January 19, 2011

சொர்க்கத்திற்கு வழி


















இப்பொழுதெல்லாம் நான்
கண்களை மூடிக்கொண்டு
கனவு காண்பதில்லை

கண்களை திறந்து கொண்டே
காண்கிறேன்
நாம் அமர்ந்து பேசிய
இடங்களையெல்லாம்
பார்க்கும் பொழுது

மீண்டும் உன் தோளில்
சாய்ந்து கொண்டு அந்த
இடங்களில் அமர வேண்டும்

புதியதொரு
சொர்க்கத்திற்கு
வழியைத் தேடி



.

காதல் ரசனை


















நீ என் கண்களைப்
பார்த்து பேசும் வேளையில்
காதல் பேசும்
உன் கண்களை ரசிப்பதா
அல்லது
உன் இதழ் பேசும்
வார்த்தைகளை ரசிப்பதா என்று
தெரியாமல் குழம்பித் தவிக்கும்
என் காதலை
காந்தம் போல் இழுத்து
தன் பக்கம்
ஒட்டவைத்துக் கொள்கிறது
உன் சீண்டல்கள் ஒவ்வொன்றும்.


.

Tuesday, January 18, 2011

உன் மாடி அறை

என் தோழனாய் நீ என்னிடம் அளவாக, அமைதியாகத்தான் பேசியிருக்கிறாய். எனக்கு அமைதி பிடிக்கும் என்பதற்காகவா அல்லது நீ அப்படி பேசியதால்தான் எனக்கு அமைதியே பிடிக்க ஆரம்பித்ததா?

உண்மையை சொல்ல வேண்டும் என்றால் முதல் முறை உன்னிடம் பேசிய பொழுது உன் அமைதியான பேச்சைக் கேட்டு தான் என் இதயம் கொஞ்சம் தடுமாறிப் போனது.

ஆனால் இப்பொழுது காதலனாக நீ என்னை படுத்தும் பாடு இருக்கிறதே.... அப்பப்பா..

முன்பெல்லாம் நான் தான் அதிகமாக பேசுவேன். நீ அமைதியாக கேட்டுக்கொண்டிருப்பாய். ஆனால் இப்பொழுதெல்லாம் நீதான் அதிகமாக பேசுகிறாய். நான் அமைதியாக கேட்கும் நிலை வந்துவிட்டது.

உன்னுடைய அந்த பழைய அமைதியை என் மனம் எதிர்பார்த்து ஏங்க ஆரம்பித்தது.

கடந்த ஒரு வாரமாக அவ்வப்போது அந்த அமைதியை உன்னிடம் காண்கிறேன்.

காரணம் விடுமுறையில் நீ உன் வீட்டிற்கு சென்றிருக்கிறாய். எப்பொழுதுமே வீட்டில் இருந்து பேசினால் நீ அமைதியாகத்தான் பேசுவாய். அதுவும் உனக்கு பிடித்த அந்த மாடி அறையில் இருந்து. அந்த அறையிலிருந்து நீ பேசினாலே என் மனம் சிறகடித்து பறக்கும். அங்கிருந்து நீ அமைதியாக பேசினால் கேட்கவா வேண்டும்.

பள்ளிப் படிப்பை முடிக்கும் வரை நீ அமர்ந்து படிப்பது அந்த அறையில் தான். நீ வீட்டிற்கு செல்லும் பொழுதெல்லாம் நம் நண்பர்களோடு சேர்ந்து அரட்டை அடிப்பதும் அந்த அறையில் தான். நீ தனிமையை விரும்பும் பொழுதும் அந்த அறையில் தான் இருப்பாய். முன்பு நமக்குள் வந்த ஒரு பிரிவின் போது என் நினைவு வரும் பொழுதெல்லாம் அந்த அறையின் தரையில் நம் இருவரின் பெயர்களையும்  சேர்த்து எழுதி பார்ப்பாய் என்று சொல்லியிருக்கிறாய். எல்லாவற்றிக்கும் மேலாக நம் திருமணத்தின் பின் நமக்கான அறையும் அதுதான் என்று சொல்லியிருக்கிறாய்.

இவையெல்லாம் தெரிந்தபின் சிறு வயதிலிருந்து உன் சுக துக்கங்களை சுமந்த அந்த அறையின் மீது ஏதோ ஒரு தனி ப்ரியம் வந்தது.

நீ எப்பொழுது ஊருக்கு சென்றாலும் அந்த அறையிலிருந்து என்னிடம் பேசும் பொழுதெல்லாம் என் மனம் அதிக ஆனந்தம் அடைகிறது. 

உன் வீட்டில் நம் காதல் முதலில் தெரிந்ததும் அந்த மாடி அறைக்குத்தான்.

நம் திருமணத்தின் பின் அந்த அறையில் உன் மனைவியாக உன் பக்கத்தில் இருக்கும் அந்த நாளை நினைத்து கனவு காண்கிறேன். இருவரும் சேர்ந்து அந்த அறை முழுதும் நம் காதலை பரப்ப வேண்டும்.

இன்று நீ உன் வீட்டிலிருந்து கிளம்புகிறாய்.

என்னைப்போல அந்த அறையும் உன் அடுத்த வருகைக்காக காத்திருக்கும்.


.

என் காதலின் வெட்கம்




















அருகில் அமர்ந்து என்னை
துரு துருவென பார்க்கும்
உன் கண்பார்வைக்கு
என்ன அர்த்தம் என்று
என் காதலிடம் கேட்டேன்

என் காதலோ
ஓடிப்போய் என்
உயிருக்குள் சென்று
ஒளிந்து கொண்டது

என் காதலே சொல்ல
வெட்கப்படும் அளவிற்கா
பார்ப்பாய் நீ.



.

Monday, January 17, 2011

பொங்கிய பொங்கலும், காதலும்

நான் பள்ளிப்படிப்பை முடிக்கும் வரை எங்கள் கிராமத்தில் உள்ள என் தாத்தா, பாட்டியிடம் தான் வளர்ந்தேன். கிராமத்தில் பொங்கல் என்றால் கேட்கவா வேண்டும். கிராமமே கலை கட்டும். பொங்கல் அன்று நான் செய்யும் உருப்படியான ஒரே வேலை கோலம் போடுவது தான். காலை சீக்கிரம் எழுந்து கோலம் போட்டு, குளித்துவிட்டு, கரும்புத் துண்டு ஒன்றை எடுத்துக்கொண்டு என் தோழிகளுடன் கோவிலுக்கு சென்று விடுவேன். கோவிலில் தோழிகளுடன் கதை பேசிக்கொண்டே கரும்பைக் கடித்தால் தான் அந்த கரும்பே இனிக்கும். அன்று கோவிலில் வைக்கும் பொங்கலைத்தான் முதலில் சாப்பிடுவோம். அதன் பின்தான் வீட்டுப் பொங்கல் எல்லாம்.

மதியம் வெண்பொங்கல், சாம்பார், பலவகை பொரியல்கள் என்று என் பாட்டி அசத்தி விடுவார்கள்.

பள்ளி படிப்பை முடித்ததும் கல்லூரியில் சேருவதற்கு சிட்டியில் இருக்கும் என் அம்மா, அப்பா வீட்டிற்கு வந்தேன். இங்கே கூட்டுக் குடும்பம். 2 அண்ணா, 4 அக்கா, 1 தங்கை, 1 தம்பி, என்னோடு சேர்த்து மொத்தம் ஒன்பது பேர். இங்கு பொங்கலுக்கு முந்தின இரவே கலை கட்ட ஆரம்பித்துவிடும். காரணம் இரவே எங்கள் தெருவில் அனைவரும் கோலம் போட்டுவிட்டு படுத்துவிடுவோம். இங்கு இரவை விட பகலில் குளிர் அதிகமாக இருக்கும். பகலில் யார் நடுங்கிக்கொண்டே கோலம் போடுவது. அதான் இரவே போட்டுவிடுவோம். ஆனால் கோலம் போடுகிறோம் என்ற பெயரில் என் சகோதரிகளுடன் போடும் கும்மாளத்திற்கு அளவே கிடையாது. இரவு ஒன்று, இரண்டு மணி வரை எங்கள் தெருவில் சிரிப்பு சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். யாரையும் தூங்கவிடுவதும் இல்லை.

இரவு தாமதமாக படுப்பதால் காலை எழுவதற்கும் நேரமாகி விடும். அதன்பின் அடித்து பிடித்து கிளம்பி அனைவரும் ஒன்றாக கோவிலுக்கு செல்வோம்.

அதற்குபின் டிவி தான். ஆனால் டிவி பார்க்கிறோம் என்ற பெயரில் நாங்கள் அடித்த கூத்து இருக்கிறதே... இப்பொழுது நினைத்தாலும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. 

இந்த வருடம் நான்கு அக்காக்களும் திருமணமாகி சென்றுவிட்டார்கள். பெண் பிள்ளைகள் என்று வீட்டில் இருப்பது நானும் என் தங்கையும் மட்டும் தான். இரவு கோலம் போடுவதற்கு கையில் கோலப் பொடியை வைத்துக்கொண்டு "என்ன கொடும சார் இது" என்று நின்று கொண்டிருந்தேன். எனக்கே கோலம் போடுவதில் ஏ,பி,சி,டி மட்டும் தான் தெரியும். அதிவும் ஆறுபேர் இருந்து கும்மாளம் போட்ட முற்றத்தில் இரண்டு பேர் மட்டும் நிற்க கவலையாக இருந்தது.

அப்பொழுது திடீரென மனதில் ஒன்று தோன்றியது. அடுத்த பொங்கல் நிச்சயமாக என்னவனுடன் எங்கள் கிராமத்தில் உள்ள அவன் வீட்டில் தான் இருக்கும். இதுதான் என் அம்மா வீட்டில் கோலம் போடுவது கடைசியாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டு புள்ளியை வைக்க ஆரம்பித்தேன். ஆனால் இரண்டு பேர் மட்டுமே இருந்ததால் இரண்டு கோலங்கள் தான் போட முடிந்தது.

எங்கள் பக்கத்து வீட்டில் துபாய் ரிட்டன் அங்கிள் ஒருவர் இருக்கிறார். அவரும் எங்கள் ஜோதியில் வைத்து ஐக்கியமாகிவிட்டார். அந்த புள்ளியை அங்கே வை, இந்த கோட்டை இங்கே இழு என்று ஒரே இம்சை. அவர் பேசுவதைக் கேட்டுக்கொண்டு கோலத்தை தவறாக போட்டுவிடுவேனோ என்று நினைத்தேன். நல்ல வேலை ஒழுங்காக போட்டு முடித்துவிட்டேன்.

மறுநாள் காலை 7:42 மணிக்கு என்னை எழுப்பியது என்னவன் தான்.

பொங்கலை குடும்பத்துடன் கொண்டாட அவன் வீட்டிற்கு சென்றிருந்தான்.

கிராமம் என்பதால் அவர்கள் நான்கு மணிக்கே எழுந்து ஐந்து மணிக்கெல்லாம் முற்றத்தில் பொங்கல் வைத்திருக்கிறார்கள்.

இங்கு நான் தூங்கிக்கொண்டிருந்தேன். அவனும் எனக்கு பொங்கல் வாழ்த்து சொல்லிவிட்டு நீ தூங்கு என்று போனை கட் செய்தான்.

அவன் குரலைக் கேட்டபின் எப்படி தூக்கம் வரும். கண்ணை மூடினால் அவன் குரலே செவியில் ஒலித்துக்கொண்டிருந்தது. சரி இந்த வருடமாவது சீக்கிரம் எழுந்து கோவிலுக்கு போகலாமே என்று நினைத்து உடனே எழுந்துவிட்டேன்.

குளித்து, சாப்பிட்டு விட்டு கோவிலுக்கு கிளம்பினேன். முதலில் விநாயகரை தரிசித்துவிட்டு வழக்கமாக நான் செல்லும் அம்மன் கோவிலுக்கு சென்றேன். கோவிலில் என் பெயரிலும், என்னவன் பெயரிலும் அர்ச்சனை செய்து அடுத்த வருடம் என்னவன் வீட்டில் பொங்கல் கொண்டாட அருள் கொடு தெய்வமே என்று வேண்டிக்கொண்டேன்.

அன்று எங்கள் வீட்டில் பொங்கல் பொங்கியதோ இல்லையோ என் மனதில் காதல்தான் பொங்கி வழிந்தது.

அடுத்த பொங்கலை என்னவனுடன் கொண்டாட போகிறேன் என்ற கனவுகளோடு இந்த பொங்கல் நிறைவடைந்தது.


.

Friday, January 14, 2011

காதல் பொக்கிஷங்கள்

காதலில் எப்பொழுதுமே காதலர்கள் கொடுத்த அல்லது அவர்கள் சம்மந்தப்பட்ட சிறு சிறு பொருட்கள் கூட பெரிய பொக்கிஷங்களாக தான் தோன்றும்.

அப்படி நான் உன்னிடம் இருந்து பெற்ற முதல் பொக்கிஷம் ஒரு பேனா. பள்ளிப் பருவத்தில் நீ எனக்கு கொடுத்தது. அந்த பேனாவில் நான் முதலில் எழுதியது நம் இருவரின் பெயர்களைத் தான். பின்பு அதை டைரி எழுதுவதற்காக மட்டும் உபயோகித்தேன்.

அதன் பின் நான் உன்னை சந்திக்க வருகையில் எடுக்கும் பஸ் டிக்கெட்டுகள், நீ என் புத்தகத்தில் கிறுக்கிய வார்த்தைகள், வாங்கி கொடுத்த கவிதை புத்தகங்கள் அனைத்துமே நான் வைத்திருக்கும் பொக்கிஷங்கள் தான். ஏன் நீ வாங்கி கொடுத்த சாக்கலேட் கவர் கூட பொக்கிஷமாக தான் இருக்கிறது என்னிடம்.   

இதுபோல இன்னும் சிறு சிறு பொக்கிஷங்கள் நிறைய உண்டு.

இவை எல்லாம் உன் நினைவாக நான் சேகரித்து வைத்த பொக்கிஷங்கள்.

என் மனதிலும் சில பொக்கிஷங்கள் அழகிய ஓவியம் போல் வரையப்பட்டுள்ளது.

அந்த ஓவியங்களில் முதல் இடம் பிடிப்பது என்னை தின்று கொள்ளும் உன் கண்கள் தான். என்னைப் பார் என்று என் கண்களை உன் பக்கம் திருப்பியது உன் கண்கள் தான். சில நாட்களில் என்னை வெட்கத்தில் தலை தாழ்த்தியதும் உன் கண்களே தான்.

கண்கள் மட்டுமா அப்படி. உன் அமைதியான குரல் கூட என் மனதில் பதிந்த பொக்கிஷம் தான். என் செவிகள் தினமும் கேட்டு என் மனதை கவிதை கிறுக்க தூண்டும் ராகம் அது.  

ஒருமுறை நீ எனக்கு கிட்டாரு வாசித்து காட்டியது நினைவிருக்கிறதா?

மின்னலே படத்திலிருந்து என்னை ஏதோ செய்துவிட்டாள் பாடலுக்கு வாசித்து காட்டினாய். என்னை அறியாமலே என் கண்களில் கண்ணீர் வந்தது. இனி நீ எத்தனை முறை வாசித்து காட்டினாலும் முதல் முறை கேட்ட அந்த பூரிப்பு என்றும் கிடைக்காத பொக்கிஷமே.

அதன் பின் நம் முதல் முத்தம். நீ முத்தம் என்றாலே பயந்து ஒதுங்கும் என்னை முத்தத்திற்கு மறுபெயர் காதல், என் காதலின் வெளிப்பாடே இந்த முத்தம் என்று நீ கொடுத்த அந்த முதல் முத்தம் என்றும் என் மனதை  விட்டு மறையாத பொக்கிஷம்.

என் மனதில் வரையப்பட்ட இந்த பொக்கிஷங்கள் எல்லாம் என் மனதோடு இருக்கட்டும்.

ஆனால் நான் பொருட்களாக சேர்த்து வைத்திருக்கும் பொக்கிஷங்கள் எல்லாம் எதற்கு தெரியுமா?

எதிர்காலத்தில் நம் பிள்ளைகளுக்கு காட்டி நம் காதலை சொல்லி பெருமைப்பட்டு கொள்ளத்தான்.



.