Monday, April 11, 2011

மனோதத்துவம் - மன எழுத்து

முன்குறிப்பு: இந்த பதிவு ஒரு புத்தகத்திலிருந்து பகிரப்படும் செய்தி.

புத்தகம்: மனதை மேம்படுத்தும் மனோதத்துவம்

ஆசிரியர்: பா. செல்வராஜ்.

மன எழுத்து:

மனிதன் பிறக்கும் போது அவன் வாழ்க்கை எங்ஙனம் இருக்கும் என்று அவன் தலையில் எழுதப்பட்டு விடுகிறது. அதன் பின்பு தலையெழுத்து அல்லது விதிப்படிதான் எல்லாம் நடக்கும். யாராவதுடைய தலையெழுத்து நன்றாக இல்லையெனில் அவர் வாழ்க்கை நன்றாக அமையாது. அவருக்கு பல துன்பங்கள் நேரலாம். ஜாதகம், ஜோதிடம், நாடி ஜோதிடம் போன்றவைகளின் மூலம் நம் தலையெழுத்தையும் நமக்கு ஏற்பட்டுள்ள  தோஷங்களையும் அறிந்து கொள்ளலாம். அவற்றுக்கு பரிகாரங்கள் உண்டு. பரிகாரங்கள் செய்வதன் மூலம் தோஷங்களைக் கழிக்கலாம். மேலும் குறிப்பிட்ட சில கடவுளர்களை வழிபடுவதன் மூலம் நம் தலைவிதியின் கொடுமையை ஓரளவு தாங்கி நிற்கலாம் - இது நம்பிக்கை. 

ஆனால் ஒரு மனிதன் தலை விதியை தானே நிர்ணயித்துக் கொள்கிறான். அவனுடைய எண்ணம், சிந்தனைகளினாலேயே அவனுடைய வாழ்க்கை முறை நிர்ணயிக்கப்படுகிறது. 

மனிதனின் ஆளுமை அவனுடைய ஐந்து வயதுக்குள் நிர்ணயிக்கப்பட்டு விடுகிறது. குழந்தை ஐந்து வயது வரை தன் சூழ்நிலையை நன்கு கவனிக்கிறது. அதன் அடிப்படையில் தனக்குள்ள குறைவான அறிவைப் பயன்படுத்தி அறிவுப் பூர்வமற்ற சில தீர்மானங்களை எடுக்கிறது. அதன் பின்னர் அக்குழந்தை இறக்கும் வரை இவ்வறிவுப்பூர்வமற்ற தீர்மானங்களின் அடிப்படையிலேயே வாழ்க்கையை அமைத்துக் கொண்டு வாழ்கிறது. 

உதாரணமாக, சிலர் "நான் பிறந்ததிலிருந்தே இப்படித்தான்", "என் ஜாதகமே இப்படித்தான்", "எனக்கு எப்போதுமே இப்படித்தான் நடக்கும்", "என் ராசியே இப்படித்தான்" என்பது போன்று அடிக்கடி குழந்தைப் பருவத்தில் தான் எடுத்த அறிவுப்பூர்வமற்ற தீர்மானங்களின் அடிப்படையில் வாழ்க்கையை நடத்திக் கொண்டு இருப்பார்கள். இவ்வறிவுப்பூர்வமற்ற தீர்மானங்களையே மன எழுத்து (தலை எழுத்து அல்ல) என்கிறோம்.

இளம் வயது முதல் ஒருவர் வறுமையில் வாடுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் தன் வாழ்வில் சுக போகங்களை அனுபவிக்க எண்ணவே மாட்டார். தான் மிகவும் துன்பப்பட்டாலும் பிறரை மகிழ்ச்சியாக வைத்திருக்க முடிந்த அளவு முயற்சி செய்வார். ஒரு பொருளை அவருக்கென கொடுத்தால் கூட அதை தனது குடும்ப உறுப்பினர்களுக்கோ அல்லது பிறருக்கோ கொடுத்துவிட்டு தனக்குத்தானே தியாகிப் பட்டம் கட்டிக் கொள்வர்.  1  கோடி ரூபாய் கையில் இருந்தால் கூட ரோட்டோரம் உள்ள டீக்கடையிலேயே டீ குடிக்கச் செல்வார்.  மாறாக மிகப் பெரிய ஓட்டலுக்குச் செல்ல அவர் மனம் எண்ணாது.  இத்தகைய நபர் "நான் வறுமையில் வாடப் பிறந்தவன், சுகப்போகங்களை அனுபவிக்கப் பிறந்தவனில்லை" என்ற அறிவுப்பூர்வமற்ற தீர்மானத்தை தன் குழந்தைப் பருவத்தில் எடுத்து அதன் அடிப்படையில் தன் வாழ்வை நடத்திக் கொண்டு வருவார்.  அவரின் மன எழுத்து எப்போதும் "துன்பப் படு" என்பதாகும்.

ஒருவரின் மன எழுத்து அவருடைய வாழ்க்கையில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை மேற்கண்ட உதாரணத்தின் மூலம் அறியலாம்.  எனவே ஒவ்வொருவரும் தன் மன எழுத்தை அறிந்து கொள்ள முயல வேண்டும்.  அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதைக் காண்போம். 

அமைதியான சூழ்நிலையில் அமர்ந்து கொள்ளுங்கள்.  நீங்கள் குழந்தைப் பருவத்திலிருந்து இன்றைய நாள் வரை பல கதைகளைக் கேட்டிருப்பீர்கள்.  அக்கதைகள் எல்லாவற்றையும் நினைவுக்கு கொண்டு வாருங்கள்.  பின்னர் அக்கதைகளில் உங்களுக்கு மிகவும் பிடித்தமான, மனதை பாதித்த பாத்திரம் எது என்பதைக் கண்டறியுங்கள்.  இப்போது அப்பாத்திரத்தின் பண்புகள் யாவை என்ற வினா எழுப்பி அப்பண்புகளை ஆராய்ந்து பட்டியலிடுங்கள்.  அப்பண்புகளே உங்கள் பண்புகள்.  கதையில் அப்பாத்திரத்திற்கு இறுதியில் என்ன முடிவு ஏற்ப்படுகிறதோ அந்த முடிவையே உங்கள் ஆழ்மனம் விரும்புகிறது.  அதை நோக்கியே உங்கள் வாழ்க்கையும் சென்று கொண்டிருக்கிறது.  இறுதியில் உங்கள் ஆழ்மனம் விரும்புவதே நிகழப் போகிறது. 

நீங்கள் விரும்பும் பாத்திரம் நல்லதாக இருந்தால் நலமே.  அப்பாத்திரத்திற்கு கதையில் நன்றே நடக்கிறது என்றாலும் நலமே.  ஆனால் பாத்திரம் சோகமான பண்புகளே கொண்டுள்ளது என்றால் பிரச்சனைதான்.  பாத்திரத்திற்கு சோகமான முடிவு ஏற்படுகிறது என்றால் உங்கள் நிலைமை பரிதாபத்திற்குரியதுதான்.  தற்போது நீங்கள் உங்கள் மன எழுத்தை (தலை எழுத்து அல்ல) அல்லது மன விருப்பத்தை ஆராய்ந்து கண்டறிந்து விட்டீர்கள்.  தேவையானால் இம்மன எழுத்தை மாற்றுவது எங்ஙனம் என்பதைக் காண்போம்.

மீண்டும் அமைதி நிலைக்கே செல்லுங்கள்.  உங்கள் மனதிற்குள் பின்வருமாறு நீங்களே சொல்லிக் கொள்ளுங்கள்.

"எனக்கு சோகமான முடிவு ஏற்பட வேண்டும், வாழ்க்கை சோகமானதாக இருக்க வேண்டும் என்று அறியாப்பருவத்தில் முடிவெடுத்துள்ளேன்.  இத்தீர்மானத்தை எடுக்கும் சமயம் எனக்கு போதுமான அளவு அறிவு வளர்ச்சி ஏற்பட்டிருக்கவில்லை.  அப்போது எனக்கிருந்த குறைந்த அறிவின் அடிப்படையில் என்னைச் சுற்றி நடந்த நிகழ்ச்சிகளை மனதில் கொண்டு,  இத்தவறான தீர்மானத்தை எடுத்துள்ளேன்.  தற்போது இத்தீர்மானம் தவறு என்று நான் உணருகிறேன்.  மேலும் சரியான வாழ்க்கை முறை எது என்பதை நான் தற்போது அறிவேன்.  எனவே இந்த நிமிடம் முதல் என் பழைய தவறான தீர்மானத்தைக் கைவிட்டு வளர்ச்சியடைந்த என் அறிவின் அடிப்படையிலேயே என் வாழ்க்கையை நடத்தப் போகிறேன்".

அமைதியான சூழ்நிலையில் அமர்ந்து, தொடர்ந்து பல முறை மேற்கூறியவாறு உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொள்ளுங்கள்.  இவ்வாறு செய்தால் உங்கள் குழந்தைப் பருவ தவறான தீர்மானம் (மன எழுத்து - தலை எழுத்து அல்ல) நீங்கி புதிய முறையில் உங்கள் விருப்பப்படி வாழ்க்கை அமையும்.


10 comments:

MANO நாஞ்சில் மனோ said...

என்ன ஜெ ஜெ, வலைத்தளம் முகம் மாறி இருக்கே!!!!!

ஜெ.ஜெ said...

சில பேருக்கு மனசுனா என்ன, வாழ்க்கைனா என்னனு புரிய மாட்டேங்குது.. அதான் கொஞ்சம் தெளிவு படுத்தலாமேனு..

மனசில பதிஞ்ச விஷயம் சாகும் வரை மறக்காதுனு புரிய வைக்கதான்..

பிரச்சனைய பாத்து ஒதுங்காம எதிர்த்து போராட கத்துக்கனும்... அதுவும் சில பேருக்கு புரியல.. அத புரிய வைக்கலாமே...

MANO நாஞ்சில் மனோ said...

அதுவும் சரிதான் ஜெ ஜெ....

ஜெ.ஜெ said...

ம்ம்ம்..

எவனோ ஒருவன் said...

நல்லதொரு தொடக்கம்....

கீழே உள்ள வரிகள் எனக்காக எழுதப்பட்டது போல தோன்றியது....

////இளம் வயது முதல் ஒருவர் வறுமையில் வாடுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் தன் வாழ்வில் சுக போகங்களை அனுபவிக்க எண்ணவே மாட்டார். தான் மிகவும் துன்பப்பட்டாலும் பிறரை மகிழ்ச்சியாக வைத்திருக்க முடிந்த அளவு முயற்சி செய்வார். ஒரு பொருளை அவருக்கென கொடுத்தால் கூட அதை தனது குடும்ப உறுப்பினர்களுக்கோ அல்லது பிறருக்கோ கொடுத்துவிட்டு தனக்குத்தானே தியாகிப் பட்டம் கட்டிக் கொள்வர். 1 கோடி ரூபாய் கையில் இருந்தால் கூட ரோட்டோரம் உள்ள டீக்கடையிலேயே டீ குடிக்கச் செல்வார். மாறாக மிகப் பெரிய ஓட்டலுக்குச் செல்ல அவர் மனம் எண்ணாது. இத்தகைய நபர் "நான் வறுமையில் வாடப் பிறந்தவன், சுகப்போகங்களை அனுபவிக்கப் பிறந்தவனில்லை" என்ற அறிவுப்பூர்வமற்ற தீர்மானத்தை தன் குழந்தைப் பருவத்தில் எடுத்து அதன் அடிப்படையில் தன் வாழ்வை நடத்திக் கொண்டு வருவார். அவரின் மன எழுத்து எப்போதும் "துன்பப் படு" என்பதாகும்.////

ஜெ.ஜெ said...

@ எவனோ ஒருவன்:

இனியாவது மாத்திபீங்களா???

siva said...

:)

இராஜராஜேஸ்வரி said...

மன எழுத்தை அறிந்து கொள்ள முயல வேண்டும்//
பயனுள்ள பகிர்வு. பாராட்டுகள்.

ரிஷபன் said...

நம் மனசை நமக்கே புரிய வைக்கிற எழுத்துக்கள்..

அம்பாளடியாள் said...

மலரும் மனதின் அழகிய நினைவுகள்கொண்டு
எழுதப்பட்ட ஆக்கங்கள் அருமை!... வாழ்த்துக்கள்
நீங்கள் மேன்மேலும் சிறந்த ஆக்கங்களைப் படைக்க.
நன்றி பகிர்வுகளுக்கு....